தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படாதமை குறித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிறு(2023.11.12) தீபாவளி வருவதால் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் ஆகியவற்றுக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவை தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் எதிர்வரும் ஞாயிறு(2023.11.12) தீபாவளி தினமாகும். மறுநாள் திங்கள் அலுவலகநாளாகும். உலகத்தில் வாழும் பெருமாலான இந்துக்களுக்கு தீபாவளி தினமும் கௌரி விரதமும் மிகமுக்கியமானவை.
கௌரிவிரதம் அனுஸ்டிக்கும் அடியார்களுக்கு திங்கள் கௌரிகாப்பு வழங்கும் தினமாகும். தீபாவளிக்கு மறுநாள் பதில் பாடசாலையுடன் விடுமுறை வழங்குமாறு கேட்கப்பட்ட வேண்டுகோள் இந்துத்தமிழர் செறிந்து வாழும் இடங்களின் அமைச்சுக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பாரம்பரிய மத கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பது எமது எல்லோருடைய கடமையுமாகும். எனவே இவ்விடயத்தை கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.