பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு கடல்சார் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் இயக்குநராக பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ், பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தல் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு 100 நாடுகளைச் சேர்ந்த 280 பத்திரிகையாளர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் சமீபத்திய வெளிப்பாடு தொடர்பான தகவல்களைத் திரட்டியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு
டிரான் பிரசன்னா கிறிஸ்டோபர் அலாஸ் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் விர்ஜின் தீவுகளில் உள்ள Banham Ventures Limited மற்றும் Brompton Properties இன் உரிமையாளர் மற்றும் இயக்குநராக இருந்து, அந்த முதலீடுகளின் மூலம் பயனடைகிறார் என தெரியவந்துள்ளது.
உலகப் பணக்காரர்களால் வரியில்லாப் பணத்தையும், வெளியிடப்படாத கருப்புப் பணத்தையும் முதலீடு செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு மண்டலமாக விர்ஜின் தீவுகள் அறியப்படுகின்றன.
மேலும், இலங்கையானது நாட்டிற்கு வெளியே மூலதனத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் நாடாக இருப்பதால், இலங்கையர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையின் பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் பயனடைந்தமை சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய தலைநகர் லண்டனில் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளின் புகைப்படங்களை ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் ரங்க ஸ்ரீ லால் டுவிட்டர் மூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.