யாழ்ப்பாணம் A9 வீதியில் செம்மணிச் சந்தியில் இருந்து A9 வழியே செம்மணி அரியாலை வீதியின் இணைப்பு வரை யாழ் நோக்கிய திசையில் வலது பக்கத்தில் உள்ள வீதியின் ஓரங்கள் யாவும் குப்பைகளால் அழகிழந்து தூய்மையற்று காட்சியளிக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் இந்த அவலம் தொடர்ந்தவாறே இருப்பது ஆச்சரியமான விடயம் என்பதோடு கவலையளிக்கும் நிலையுமாகும்.
மக்களோ அல்லது மாநகரசபையோ இது பற்றி அக்கறை கொள்ளாதது ஏன் என சமூக சுற்றுச்சூழலியாளாரர்கள் விசனப்பட்டுக் கொள்கின்றனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தேவையாகின்றது என அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
அருகிருக்கும் மக்களின் இயலாமை
இந்த இடத்திற்கு அண்மையில் உள்ளவர்களே தான் குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதில் கூடிய அக்கறை எடுக்க வேண்டும் என்ற போதும் அவர்கள் கண்டும் காணாது இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அருகிலிருக்கும் மக்களிடம் இது தொடர்பில் வினவிய போது யார் யாரோ எல்லாம் வந்து கொட்டிவிட்டுப் போகிறார்கள்.அவர்களிடம் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை.இந்தப் பகுதி பிரதேச சபைகளும் கூட கவனமெடுப்பதில்லை.
மக்களில் ஒரு சிலராகிய தம்மால் இதனை விட வேறு எதனைச் செய்ய முடியும் என கேள்வி கேட்டவாறே தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்துகின்றனர்.
அறிவிப்புப் பலகைகளை வைத்து குப்பைகள் கொட்டுவதனை தவிர்க்க கேட்கலாம்.அந்த முறை ஒரளவுக்கேனும் குப்பைகள் வீசப்படுவதனை தவிர்க்க முடியும்.
பிரதேச சபை குப்பைகளை போடுவதற்காகவும் பின் அதனை அகற்றுவதற்காகவும் ஒரு ஒழுங்கை ஏற்படுத்துவார்களேயானால் இந்த வீதியின் ஓரங்கள் யாவும் அழகோடு மெருகேறி வருவோரை வரவேற்கும் வண்ணம் இருக்கும் என அந்த மக்களில் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண வரவேற்பு வளைவு அருகில்
A9 வீதியில் உள்ள யாழ்ப்பாண வரவேற்பு வளைவும் செம்மணி வீதியில் உள்ள வரவேற்பு வளைவும் இந்த குப்பைகளை கொட்டும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
வளைவை கடந்து A9 வழியே யாழ்ப்பாணம் செல்லும் போது வலது பக்கத்தில் குப்பைகளால் நிறைந்த நீர் நிலைகளை அவதானிக்க முடியும்.இந்த அவதானிப்பு யாழ்ப்பாணம் வருவோரை வளைவு கட்டி சிவபூமி காட்டி மகிழ்ச்சியோடு வரவேற்று அடுத்து அவர்களை முகம் சுழிக்க வைத்து அழைத்துச் செல்வது போல் அமைகிறது யாழ்ப்பாணத்தின் இந்த இடத்தில் குப்பைகளை கொட்டி விடுவதும் அது தொடர்வதும் என விருந்தினர் விடுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுகின்றார்.
விருந்தினர் விடுதியில் வருவோரை புன்கைத்து வரவேற்று அவர் முகம் சுழித்து மனம் கோணாது நடந்து கொள்ள பழக்கப்படுத்தப்பட்ட எனக்கு யாழ்ப்பாண வளைவை கடந்து பயணிக்கும் போது வீதியின் இரு ஓரங்களை கண்ணுற்ற அதன் இயற்கையை இரசிக்க முயன்ற போது செம்மணிப் பக்கம் இருந்த குப்பைகள் முகம் சுழிக்க வைத்து விடுகின்றன.எனவும் தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.
செம்மணி வீதி வளைவில் வீதியோரங்களில் குறைந்தளவில் குப்பைகள் வீசப்பட்டருப்பதையும் A9 வீதியில் வளைவு கடந்து 316/1 பலத்திலும் அதன் அருகிலும் அளவுக்கு அதிகமாக கொட்டப்பட்ட கழிவுகளால் தூய்மையற்ற சூழலும் துர்நாற்றமுமாக இருப்பதனை சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும்.
பலவகை கழிவுகள்
எலுமிச்சை காய்களை வெட்டி பயன்படுத்திய பின்னர் அதன் பாதிகளை 316/1 பாலத்தின் கீழ் கொட்டிவிட்டிருக்கிறார்கள்.இவை பொதுவாக உணவகங்களில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
கழிவாக கழிக்கப்படும் பொலித்தீன் உறைகளையும் கொண்டுவந்து கொண்டிவிட்டிருக்கிறார்கள்.இவை பொதிகளில் இருந்து நீக்கப்பட்டவையாக இருக்கின்றன.அதிகளளவில் ஒரேமாதிரியான கழிவுகளை அவதானிக்க முடியும்.
இதனால் இந்த கழிவுகளை வியாபார நோக்கில் பயனபடுத்தப்பட்டதன் பின்னரான கழிவுகளாகவே கருத வேண்டும். பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவு கட்டப்பயன்படும் இலன்ஞ் சீற்களும் பழைய ஆடைகளும் உணவுக் கழிவுகளும் என பல்வகையான கழிவுகளை 30 m நீளமான வீதியோரத்தில் அவதானிக்க முடிகின்றது.
கோடை காலங்களில் நீரற்ற வெளியாகவும் மழைக்காலங்களில் நீர் கொண்ட நிலமாகவும் இருக்கும் இந்த இடத்தின் அரியாலை செம்மணி வீதி A9 பாதையுடன் இணையும் இடத்திற்கு அண்மையில் உள்ள பகுதிகளில் நிலம் பகிர்ந்து கொள்வதற்கான எல்லைக்கற்கள் இடப்பட்ட பகுதிகளையும் அவதானிக்க முடிகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தூய்மையான நகரம்
நமது நகரத்தை நாமே தூய்மையாக்குவோம் எனற எண்ணக்கருவை முன் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்தால் வீதிகளிலும் பொது இடங்களிலும் காணப்படும் கழிவுகளை காணாது போகச் செய்ய முடியும் என்றுரைக்கின்றார் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரியொருவர். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வியாபார நிலையமும் தங்களிடமிருந்து அகற்றப்பட வேண்டிய மீண்டும் பயன்படுத்த முடியாத மீதிகளை, கழிவுகளை சேர்த்து பிரதேச சபைகளின் குப்பை சேகரிப்புக்கூடாக அகற்ற முற்பட்டால் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும்.
உக்கலடையக் கூடிய கழிவுகளை கூட்டெருவாக்கிக் கொள்ள முயல வேண்டும். ஒவ்வொரு குடி சார் மக்களும் தங்களைச் சூழவுள்ள இடத்தின் தூய்மையைக் கருதி கழிவுகளை கூடைகளில் போடும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புகள் தேவையாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்பாணம் தூய்மையான இயற்கையோடு இசைந்த பூமியாக என்று மாறுமோ அன்று தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் எனவும் தன்னைப் போலவே ஒவ்வொரு சுகாதார துறை ஊழியரும் இருப்பார்கள் என தான் எண்ணுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.