யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட டிஜே களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம்(10) இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
எனினும், யாழ்ப்பாண மாநகர சபை இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அறிவித்துள்ளது.
மறுக்கப்பட்ட அனுமதி
இது தொடர்பில் லங்காசிறி செய்திப்பிரிவு யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலனை தொடர்பு கொண்டபோது, “ இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், எனினும் தாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதுடன் அனுமதியை மீறி இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.
மேலும், அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த களியாட்ட நிகழ்வு தொடர்பில் குறித்த நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் இன்றையதினம்(11) விளக்கம் கோரியுள்ளதாகவும் யாழ். மாநகர ஆணையாளர் குறிப்பிட்டார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில், “விளையாடு மங்காத்தா” எனும் பெயரில் நடைபெற்ற இந்த இரவு இசை விருந்துக்கு, ஒருவருக்கு உணவுடனான நுழைவுச் சீட்டு 3 ஆயிரம் ரூபாய்க்கும், சாதாரண நுழைவுச் சீட்டு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான, கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எவ்வித அனுமதிகளும் இன்றி இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதுடன் வரி ஏய்ப்பு செய்யும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்த கேளிக்கை நிகழ்வின்போது, மதுபான பாவனை காணப்பட்டதுடன், கைக்கலப்பும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவறான முன்னுதாரணம்
இதேவேளை, குறித்த நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் 4ஆம் திகதி நடத்தப்பட்ட இதேபோன்றதொரு கேளிக்கை இசை நிகழ்ச்சி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அந்த நிகழ்வின் போது போதைப் பொருள் பாவனை அதிகரித்திருந்ததுடன், பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் தனியாளாகவும், ஜோடிகளாகவும் கலந்து கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு தனியான அறைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில், வடக்கில் தற்போது அதிகரித்து வரும் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகள் எதிர்கால இளைய சமூகத்தினருக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதுடன், தவறான பாதையில் இட்டுச் செல்ல வழிவகுப்பது போல உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், யாழ். மாநகர சபை அனுமதி வழங்க மறுத்தபோதும் அதனையும் மீறி இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளமை, மாநகர சபையினரின் ஆணையை மறுப்பதுடன், அவமதிக்கும் செயற்பாடாக பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்கால இளைய சமூகத்தினரை தவறான பாதையில் திசை திருப்பும் வகையில் இந்த கேளிக்கை நிகழ்வுகள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.