கொழும்பு புகுதியில் உள்ள விடுதியொன்றில் வைத்து போதகர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் நேற்றைய தினம் (21-12-2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கிருலப்பனை பொலிஸாரும், பிரதேசத்தின் நன்னடத்தை அதிகாரியும் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 9 சிறுமிகளும் இன்று பொலிஸாரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சிறுமிகளைபாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் போதகர் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 9 சிறுமிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சிறுமிகள் 3 குடும்பங்களின் சகோதரிகள் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
விடுதியின் போதகர் தம்மை துஷ்பிரயோகம் செய்வதாக சிறுமிகள் தாம் கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரிடம் கூறியுள்ள நிலையில், இதனை அடுத்து அதிபர் கிருலப்பனை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸ் குழுவொன்று விடுதிக்கு சென்று குறித்த சிறுமிகளிடம் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
போதகரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 9 சிறுமிகள் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டி சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் போதகரான இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமிகள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி தெஹிவளையிலுள்ள தேவாலயத்துடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.