நத்தார் பண்டிகைக்காக அதிகளவான கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இவ்வாறு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைக்கு உட்பட்டு பொதுமன்னிப்பு
குறித்த கைதிகளுக்கு நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இன்றைய தினம் (25.12.2023) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் பொதுமன்னிப்புக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.
ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், இரண்டு பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.