வட் வரி அதிகரித்துள்ளதன் காரணமாக பொது கழிப்பறைகளுக்கு கட்டணமும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கம் நேற்று (01.01.2024) முதல் VATவரியை 18% ஆக உயர்த்தியதன் காரணமாக பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
பொதுமக்கள் பாதிப்பு
அதன்படி, பொதுக் கழிப்பறைகளுக்கான 10.00 ரூபா கட்டணம் 20.00 ரூபாயாகவும், 20.00 ரூபாவாக இருந்த கட்டணம் 30.00 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வட் வரியுடன் சேர்த்து குடிநீர் கட்டணமும் அதிகரித்துள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின் படிப்படியாக குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.