கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திப்பெற்றும் உயர்கல்வியை தொடர்வதற்கு நிதி வசதி இல்லாத மாணவர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் மாணவர்களுக்கு இவ்வாறு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசேட கொடுப்பனவு
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றாலும் உயர்கல்வியை தொடர்பவதற்கான நிவாரணம் தேவைப்படும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
அதற்கமைய அனைத்து மாதங்களிலும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் இரு தினங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்து அவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS)மூலம் அறிவிக்கப்படும். தற்போது இந்த மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவொன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 100 கல்விப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 5000 மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவை மாதாந்தம் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.