மடு மற்றும் துணுக்காய் ஆகிய இரு பிரதேசங்களை இணைத்து ஒரே கல்வி வலயமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (05.01.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் முதலிடம்
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம் முதலிடத்தை பெற்றுக் கொண்ட நிலையில், க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன.
இதனோடு மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
வட மகாண கல்வி அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து செயற்றிறனுடன் பணியாற்றி வருகின்றனர். அது தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும்.
பல துறைகளுக்கு தீர்வு
இவற்றைவிட, சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதுவரையில் பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தலையீடுகளை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
குறித்த பிரதேச விவசாயிகளின் அறுவடைகளை கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவாகக் காணப்படுகின்றன.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.