சிறுவன் ஒருவனின் விரலை துண்டித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை நேற்று(15.01.2024) வெலிசறை நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ராகம, பொடிவீகும்புர பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 11 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 14 வயது சிறுவன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் ஏற்பட்ட மோதலின் போது சந்தேகநபர் வாளால் சிறுவனை தாக்கியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தாக்குதலில் சிறுவனின் இடது கையின் ஒரு விரல் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை நீதிமன்றில் வழங்கிய பொலிஸார், சந்தேகநபர் சிறுவனை தாக்க பயன்படுத்திய வாளைக் கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



















