கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரல் நடவடிக்கை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொட்டாவை பஸ் நிலையத்தில் கடந்த (02.02.2024) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸின் சாரதிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட நபர் ஒருவர் அவருக்கு மிரட்டல் விடுத்து ரூ. 20,000 பணம் தருமாறு தெரிவித்து தொலைபேசியை துண்டித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்ஸை நிறுத்தி வைத்திருந்த போது பஸ்ஸில் ஏறிய ஒருவர் சாரதிக்கு தெரியாமல் சாரதியை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து, கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டபோது, சாரதியின் புகைப்படத்தை WhatsApp மூலம் வெளிநாட்டு தொலைபேசி இலக்கம் ஒன்றுக்கு அனுப்பியமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சாரதிக்கு WhatsApp ஊடாக செய்தியொன்று வந்துள்ளதோடு, அதில் ரூ. 25,000 பணம் தருமாறும், அவ்வாறு தராவிட்டால் கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் 34 வயதான, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துகின்ற மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளி ஒருவர் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடந்த (03.02.2024) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை CCD யினர் முன்னெடுத்துள்ளனர்.