கத்தார் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் திரும்ப அனுமதிக்க கத்தார் எமிர் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதித்து தீர்ப்பு
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முன்னாள் இந்திய கடற்படையினர் எட்டு பேர் மீதும் கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
பேச்சு வார்த்தை
பின்னர் இந்தியா சார்பில் சட்ட பூர்வமாக எடுத்த நடவடிக்கையினால் இந்த மரண தண்டனை குறைக்கப்பட்டது.
எனினும் தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்காக இந்திய வெளியுறவு துறை சார்பில் கத்தார் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கர் தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகளை கத்தார் அரசுடன் தீவிரமாக நடத்தி வந்தார்.
இதன் பலனாக கத்தாரில் கைது செய்யப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் — கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ரகேஷ் ஆகிய 8 பேரையும் 18 மாதங்களுக்கு பிறகு கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது.