களுத்துறை – அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.
பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் முழு நாட்டையும் உலுக்கிய கொடூரச் சம்பவமாக பதிவானது.
கோழி வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுதினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபருக்கு இன்றையதினம் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.