யாழ்ப்பாணம், வடமராட்சி, கட்டக்காடு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மர்மப் பொருள், கடற்படையினரால், அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் நேற்று கரைக்குக் கொண்டுவரப்பட்டது.
குறித்த பொருள் நேற்று (2024.02.25) வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குழு கடலில் மிதப்பதைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
4000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மர்மபொருள்
கடலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குழு கடலில் அவ்வாறானதொரு பொருள் மிதப்பதைக் கண்டு கடற்படையினருக்கும் யாழ்ப்பாண உதவிப் பணிப்பாளருக்கும் அறிவித்துள்ளனர்.
இரும்பினால் செய்யப்பட்ட குறித்த பொருள் 4000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருப்பதால், யாழ்ப்பாணம் வெத்தில கேணி கடற்படைத் தளத்தின் அதிகாரிகள் அதனை மீட்பதற்கு பேக்ஹோ மற்றும் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இது மர்மமான பொருள் அல்ல என்றும் ஆழ்கடலில் பெரிய கப்பல்களை நங்கூரமிட பயன்படுத்தப்படும் சிறப்பு மிதவை என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
இரும்பினால் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ள மிதவையின் மேற்பகுதி கூம்பு வடிவில் இருந்தாலும் கீழ்பகுதி அதிக அளவு இரும்பை பயன்படுத்தி அதிக எடை தேவைப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மீட்கப்பட்ட விசேட மிதவை வடமராட்சி கடற்கரைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.