களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு வழங்குவதற்காக உணவு பொதியில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச்சென்ற பெண்ணொருவர் களுத்துறை வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று (28) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், பயாகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறைச்சிக்குள் ஹெரோயின்
இவர் ஆறு வயது சிறுமியுடன் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரை பார்வையிட சென்ற போது கணவருக்காக எடுத்து சென்ற கோழி இறைச்சி பொதியில் கோழி இறைச்சி எலும்புகளுக்குள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண்ணிடம் இருந்து 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக, களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.