முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை தடுக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்றொழில் அமைச்சின் கீழ் நன்னீர் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் நெக்டா நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (29.02.2024) காலை இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை முறிப்பு குளத்தில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் இரண்டு கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதை நெக்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார்.
அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை, நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது, காயமடைந்த நெக்டா நிறுவன ஊழியர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.