தான் இரண்டு ஓய்வூதியம் பெறுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் அதிபர் சந்திரிகா மறுத்துள்ளார்.
முன்னாள்அதிபர் சந்திரிகா குமாரதுங்கவிற்கு,இரண்டு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி வண. வலஹா ஹெங்குனவெவே தம்மரதன தேரர்,தெரிவித்திருந்தார்.
அவருக்குரிய ஓய்வூதியம் மாத்திரமே
எனினும் தேரரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என சந்திரிக்காவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் என்ற முறையில் அவருக்குரிய ஓய்வூதியம் மாத்திரமே அவர் பெறுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவின் சதி
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் அதிபரின் ஓய்வூதியத்தை 97,000 ரூபாவாக உயர்த்தியதாகவும் திருமதி குமாரதுங்கவின் ஓய்வூதியம் மற்றும் முன்னாள் அதிபர் டி.பி.விஜேதுங்கவின் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் சம்பள உயர்வுக்கு ஏற்ப ஓய்வுபெற்ற அதிபர்களும் கூடுதலான அதிகரிப்பை அனுபவித்திருக்க வேண்டும் என்ற போதிலும் அதிகரிக்கப்படவில்லை.
மைத்திரியின் பெருந்தன்மை
எனினும், 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அதிபராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நிலைமை சீர்செய்யப்பட்டதாகவும், திருமதி குமாரதுங்கவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் சமூக சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.