சிலாபத்தில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதே வீதியில் சென்ற லொறி மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சிலாபம் – திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சிலாபம் – திகன்வெவ, மாரக்கெல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியின் அருகே நின்றுகொண்டு உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் ஊற்றிக்கொண்டிருந்த இளைஞன் மீதே இவ்வாறு டிப்பர் வாகனம் மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தந்தையின் சிறிய பெக்கோ இயந்திரத்தை தனது சொந்த உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற போது, உழவு இயந்திரத்தில் திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்திற்கு நிரப்பிக் கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக அதிவேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி அந்த இளைஞன் மீதி மோதி கவிழ்ந்துள்ளது.
விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளமொன்றில் விழுந்ததாகவும், விபத்தில் கவிழ்ந்த டிப்பரின் முன்பக்க இரண்டு சக்கரங்கள் இளைஞனின் மார்பில் கடுமையாக தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் சிலாபம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.