கிளிநொச்சி முகமாலை பகுதியில், பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு குறுக்காக பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.
குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுவதால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆளுநர் நேரடியாக தலையீடு
இன்றைய தினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரச்சினையானது எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
எனவே இவ்விடம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.