இன்றைய தினம் வியாழக்கிழமையுடன் கூடிய பஞ்சமி திதி. இதை குபேர பஞ்சமி என்று சொல்லுவார்கள். அதே போல் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள் ஆகையால் இதை குரு பஞ்சமி என்றும் சொல்லலாம். இத்துடன் காரடையான் நோன்பு என்கிற விசேஷமான தினமும் இணைந்திருப்பது இன்றைய நாளை இன்னும் சிறப்பு வாய்ந்ததாக ஆக்குகிறது.
இத்தனை சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்த நாளில் நாம் குபேரர் அன்னை போன்றோரை வழிபடும் போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள பண கஷ்டங்கள் அனைத்தும் அகலும். அவர்களை இந்த நாளில் எளிமையாக எப்படி வழிபடுவது என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். பண வரவை அதிகரிக்க குபேர பஞ்சமி தீபம் இன்றைய நாளில் நாம் இரண்டு வகையான வழிபாடுகளை செய்ய வேண்டும். ஒன்று குபேரருக்கு உகுந்த தினமான குபேர விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். மற்றொன்று வாராகி அன்னைக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
இந்த இரண்டு வழிபாட்டையும் மாலை நேரத்திலே செய்யலாம். முதலில் குபேரருக்கான வழிப்பாட்டு தீபத்தை ஏற்று விடலாம். இதற்கு வீட்டின் வடகிழக்கு மூலையை முதலில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு தட்டில் மஞ்சளை கொட்டி பன்னீரை ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். இதை வைத்து சுவரில் ஸ்வஸ்திக் சின்னம் வரைய முடிந்தால் குபேர மூலையில் வரைந்து கொள்ளுங்கள். அப்படி வரைய முடியாது என்பவர்கள் ஒரு மனையில் வரைந்து கொள்ளலாம் இல்லை எனில் ஒரு சுத்தமான தட்டில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதன் மேல் கொஞ்சம் பூக்களை வைத்து விடுங்கள்.
வீட்டில் குபேர விளக்கு இருந்தால் அந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள். இல்லையெனில் ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி குபேரரை நினைத்து அந்த இடத்தில் தீபம் ஏற்றி கற்பூரம் ஊதுபத்தி காட்டி வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தினை மறுநாள் சுத்தம் செய்து விடலாம். அப்படியே அங்கே வைத்து விடலாம் என நினைப்பவர்கள் வைத்து விடுங்கள் தவறு ஒன்றும் கிடையாது. அதே போல் வாராகி அன்னையும் இன்றைய நாளில் வழிபடுவது மிகவும் விசேஷம். அதற்கு வாராகி அன்னை படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அன்னைக்கு நல்ல வாசம் மிக்க மலரை மாலையாக கட்டி போடுங்கள். செவ்வரளி பூக்கள் கிடைத்தால் அதை கொண்டும் வாராகி அன்னை வழிபாடு செய்வது சிறந்தது.
அடுத்ததாக வாராகி அன்னைக்கு உகந்த நெய்வேத்தியமான கிழங்கு வகைகள் வைத்து வழிபாடு செய்யலாம். இத்துடன் பானகம், வேர்க்கடலை வெல்லம் சேர்த்து உருண்டை என இவற்றையும் நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு வீட்டை நல்ல நறுமணம் மிக்கதாக மாற்றி விடுங்கள். வாராகி அன்னைக்கு இந்த தூபம் போடுவது மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அன்னையின் படத்திற்கு முன்பாக பஞ்சமுக தீபத்தை ஏற்றுங்கள் படம் இல்லை என்றால் அகல் விளக்கை மட்டும் கூட ஏற்றலாம். இவையெல்லாம் செய்த பிறகு அன்னையின் படத்திற்கு முன்பாக அமர்ந்து பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
உங்களுக்கு என்ன விதமான பூக்கள் கிடைக்கிறதோ அதை வைத்து 108 அன்னையின் போற்றிகளை சொல்லி வணங்குங்கள் அல்லது ஓம் வாராஹி அன்றைய போற்றி என்று இந்த ஒரு நாமத்தை 108 முறை சொன்னாலும் போதும். இந்தவழிபாடு முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்றைய தினத்தில் நாம் ஏற்றக் கூடிய இந்த ரெண்டு தீபங்களும் வழிபாடுகளும் நம்முடைய செல்வ வளத்தை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.