யாழ். கடற்றொழிலாளர்கள் திடீரென யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தை நோக்கி சென்றதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும் யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்று (19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் முன்னெடுத்துள்ள இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
அதிகளவான பொலிஸார்
இந்நிலையில், ஆதரவு தெரிவிப்பதற்காக வருகைதந்த மாதகல் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுடன் இணைந்து பேரணியாக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சிறிது நேர போராட்டத்தின் பின்னர் கடற்றொழிலாளர்கள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, அதிகளவான பொலிஸார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.