வவுனியா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்களிடம் அங்கு கடமையிலுள்ள தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கின்றதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தூய்மையான வார்த்தைப் பிரயோகம் இல்லை சேவை, மனப்பான்மை, மனிதப் பண்புகளை மதிக்கத் தெரியாதவர்களை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்திவருகின்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இச் செயற்பாடுகள் வவுனியா வைத்தியசாலையில் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து அவசிய அவசர சிகிச்சைக்காகவும், தமது உறவினர்களைப் பார்வையிடவும் வரும் உறவினர்கள் நண்பர்கள் மீது பாதுகாப்பு என்ற போர்வையில் கடமையிலுள்ள ஊழியர்கள் மனிதாபிமானமற்று நடந்துகொள்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு இன்னல்களுடன் அரச வைத்தியசாலைக்குச் செல்பவர்கள் மீது சேவை மனப்பான்மை மிக்க செயற்பாடுகள் காணப்படவில்லை. சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் போல, பல்வேறு கெடுபிடிகளையும், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் அவர்கள் மீது, இதனால் மேலும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
இந்நடவடிக்கையினால் அரச வைத்திய சாலை, அதிகாரிகள் மீது வெறுப்பும் ஏற்படுகின்றது. ஒரு நோயாளரைப் பார்வையிடச் செல்பவர் மேலும் நோயாளராகவே வீடு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.
எனவே இவற்றை சரி செய்து மக்களுக்கான சேவையை சீர்ப்படுத்தி ஒழுக்கமுள்ள பாதுகாப்பு ஊழியர்களைக் கடமையில் ஈடுபடுத்த வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் தனியார் பாதுகாப்பு “சேவை” நிலையம் அத்தியாவசியமான மக்கள் “சேவை” நிலையங்களில் ஒன்றான வைத்திய சாலையில் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் பாதுகாப்பு சேவை மேற்பார்வை ஊழியர் ஒருவர் அங்கு கண்காணிப்புக் கடமையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
இந்நிலையில் வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்களிடம் ஒழுக்கமற்று நடக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதோடு வவுனியா பொது வைத்திய சாலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் எவ்வாறு நோயாளர்கள், அவர்களைப் பார்வையிடவரும் உறவினர்கள் நண்பர்களுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று கடமையிலுள்ளவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தும் சில தவறுகள் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு ஒழுக்கமற்றவர்களுக்கு எதிராக பல தடவைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வைத்திய சாலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் வைத்திய சாலையில் இடம்பெறும் திருட்டுக்கள், வன்முறைகளையும் தடுக்கும் நோக்குடன் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இவ்வாறான நடவடிக்கையினைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு எதிராக இடம்பெறும் இடையூறுகள், கெடுபிடிகள் உள்ளிட்ட ஒழுக்கமற்ற நடவடிக்கையில் பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபட்டால் தன்னிடம் தயக்கம் இன்றி முறையிடுமாரு தெரிவித்த அவர் , அந்த ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.