திருகோணமலையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமனது திருகோணமலை மொரவெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை மொரவெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நண்பர்களுடன் பாட்டி ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு வந்து தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாதோரினால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்
இந்த தாக்குதல் சம்பவத்தில் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) இளைஞரே காயம் அடைந்துள்ளார்.
உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டி காயம் ஏற்பட்ட நிலையில் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தி இதனையடுத்து 1990 என்ற அவசர நோயாளர் காவுவண்டிக்கு அழைப்பு விடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாரிய காயம்
மேலும், தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.