யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (28) மதியம் இடம்பெற்ற விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த (65) வயதுடைய சீனியர் இராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மது போதையில் சாரதி
உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில் இருந்ததாகவும் இதனால் வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவியந்திரத்துடன் நிலை தடுமாறி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் போது வீதியிலிருந்த மின்கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.
மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.