அமெரிக்காவின் (America) மேரிலாண்டில் பாலிட்மோர் பால விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஆறு பேர் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விபத்தில் சிக்கியவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நான் பேர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாரிய மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள்
அத்துடன், கொங்கிரீட் தூண்கள், இரும்புக் கம்பிகள் போன்றவற்றினால் மீட்புப் பணிகளை மேற்கொள்வோருக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த விபத்தில் சிக்கிய இரண்டு பேரின் சடலங்கள் வாகனமொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. ஏனைய நான்கு பேரின் சடலங்களை மீட்டு எடுப்பதில் பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுழியோடிகளினால் குறித்த பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது ஆபத்து நிறைந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் காணப்படும் இடிபாடுகள் அகற்றப்படும் வரையில் நீரில் மூழ்கிய பணியாளர்களது உடல்களை மீட்பது சாத்தியமற்றது என சுழியோடிகள் தெரிவிக்கின்றனர்.
அடையாள விபரங்கள்
மெக்ஸிக்கோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் மற்றும் எல்சல்வடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு பணியாளர்களே இவ்வாறு கடலில் மூழ்கியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தில் சிக்கிய ஆறு பேரில் நான்கு பேரின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இடிபாடுகள் அகற்றப்பட்டதன் பின்னரே சுழியோடிகளினால் குறித்த பகுதிக்கு சென்று உடல்களை மீட்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.