இலங்கை அதிகாரிகள் ஜி.பி. நிஸ்ஸங்க (G.P. Nissanga) மற்றும் பிமல் ருஹுனகே (Bimal Ruhunake) ஆகியோர் மீதான விசாரணைகளை கைவிட வேண்டும் என நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) கோரிக்கை விடுத்துள்ளது.
இம்மாதம் 5ஆம் திகதி மாலை, இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி மற்றும் தனியார் செய்தித் தளமொன்றின் உரிமையாளரும் ஆசிரியருமான நிஸ்ஸங்க, தெற்கு சப்ரகமுவ மாகாணத்தின் பல்லேபெத்த பிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.
குறித்த செய்தித்தளமானது, இராணுவ தளபதி ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கட்டுரை வெளியிட்டதை அடுத்து இராணுவத் தளபதி விக்கும் லியனகேவின் (Vikum Lianake) முறைப்பாட்டைத் தொடர்ந்து நிஸ்ஸங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிக்கை அடையாள அட்டை
இதனையடுத்து, பிரிதொரு சம்பவத்தில் மார்ச் 6 அன்று, சுதந்திர ஊடகவியலாளர் பிமல் ருஹுனகேவை வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காவற்றுறையினர் கைது செய்துள்ளனர்.
தனது குழந்தையை தத்தெடுப்பதற்காக கொடுக்க விரும்பும் ஒரு தாயை நேர்காணல் செய்வதற்காக கூறி தனது பத்திரிகை அடையாள அட்டையை அணிந்துகொண்டு உள்ளூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
எனினும், அவர்களைப் படம் எடுக்கவிடாமல் காவற்றுறை அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். முச்சக்கர வண்டியில் தாயையும் பிள்ளையையும் காவற்றுறை நிலையத்திற்கு அதிகாரி அழைத்துச் சென்றபோது ருஹுனகே தொடர்ந்து படமெடுத்தார். அதன் காட்சிகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ருஹுனகே மார்ச் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மின்னஞ்சல் மூலம் கோரிக்கை
இந்தநிலையில், இலங்கை ஊடகவியலாளர்கள் மீதான கைதுகள் மற்றும் குற்றவியல் விசாரணைகள், ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்விளைவுகள் மற்றும் ஊடகங்களில் பீதிக்கொள்ள வைக்கும் விளைவை உருவாக்கலாம் என சி. பி.ஜே நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் கார்ளஸ் மார்டினெஸ் டி லா செர்னா ( Carlos Martinez de la Serna ) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் சி. பி.ஜே இன் மின்னஞ்சல் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.
அத்துடன் சி. பி.ஜேயானது காவற்றுறை பேச்சாளர் நிஹால் தல்துவவுக்கும் அழைப்பு விடுத்து, கருத்தை கோரியது. எனினும் அவரிடம் இருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று சி. பி.ஜே தெரிவித்துள்ளது.