முல்லைத்தீவு – துணுக்காய்( Mullaitivu- Thunukkai) ஆரோக்கிய புரம் தமிழ் வித்தியாலயத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறும் தகுதியான அதிபரை நியமிக்குமாறு கோரியும் குறித்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள மேற்படி பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.
அடிப்படை வசதிகளின்மை
தரம் 05 மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய தகுதியான ஆசிரியரின்மை மற்றும் பாடசாலையினுடைய அடிப்படை வசதிகளின்மை என்பவற்றை நிவர்த்தி செய்து தரக்கோரியும் குறித்த பாடசாலைக்கு தகுதி வாய்ந்த அதிபர் ஒருவரை நியமித்து தருமாறும் கோரியும் இன்று(03.04.2024) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் பாடசாலை மாணவர் ஒருவர் ஆசிரியர் ஒருவரால்தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு துணுக்காய் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்களுடன் கலந்துரையாடி வழங்கிய உறுதி மொழியை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டு 10 மணிக்கு பாடசாலை மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.