இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அடுத்துவரும் நாட்களில் புதிய தடைகளை விதிக்ககூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.
மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம்
எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அடுத்து, ஜி-7 உறுப்பு நாடுகள், கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து ஜனாதிபதி பைடன், விரிவான ஆலோசனையை மேற்கொண்டார்.
இதன்படி, வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்ககூடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்
ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணை திட்டங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படை மற்றும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் அமைப்புகளுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படும் என அவர் கூறினார்.
உக்ரைன்மீது போர் தொடுத்த ரஷ்யா தொடர்பில் மேற்குலகம் கடைபிடித்த தடைகளை ஆஸ்திரேலியாவும் பின்பற்றியது. எனவே, ஈரான் விவகாரத்திலும் அந்த அணுகுமுறை பின்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.