அம்பாறை சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் நேற்று (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும்,
விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டது.
அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகாரியாலயம் மேற்கொண்டுள்ளது