இந்திய முட்டை இறக்குமதி நிறுத்தப்பட்டால் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை நூறு ரூபாவாக உயரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக முட்டையின் விலை 50 ரூபாவை கடந்து அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக, புத்தாண்டு காலத்தில் ஒரு சில பெரிய அளவிலான உற்பத்தியாளர்களைத் தவிர, ஏனைய பேக்கரிகள் கேக் தயாரிக்கவில்லை என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் கேக் விற்பனை எழுபத்தைந்து சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வேகமாக வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை மீண்டும் மிகவும் அநியாயமாக உயர்த்தப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை அதிகரிப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும், இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் முட்டைக்கான விலையை குறைக்கவில்லை.
தற்போதும் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதுடன் முட்டையுடன் தொடர்புடைய அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை உள்நாட்டில் மீண்டும் முட்டை விலை அதிகரிக்கும் பட்சத்தில், அரசாங்கம் இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.