வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28, 29, 30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மே மாதம் 12ஆம் திகதி வரை வெப்பநிலை தற்போது உள்ளதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பகல் பொழுதின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கினி நாள் எப்போது?
இக்காலத்தில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு உண்மையான வெப்பநிலையை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இந்துக்களின் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் காண்டாவனம் அல்லது அக்கினி நாள் / அக்கினி நட்சத்திரம் என்பது எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை முதல் 28.05.2024 செவ்வாய்க்கிழமை வரை நிலவும் என குறிப்பிடப்படுகிறது.
(காண்டாவனம் /அக்கினி நாள் /அக்கினி நட்சத்திரம் என்பது பரணி நட்சத்திரத்தின் 3ஆம், 4ஆம் பாதங்களையும் (கால்), கார்த்திகை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களையும், ரோகிணி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தையும் சூரியன் கடக்கும் நாட்களே ஆகும்). கடந்த சில நாட்களாக இரவு பொழுது வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது.
இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு. தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளது.
இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது.
எதிர்வரும் 27, 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் வட மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனினும், இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல.
எனவே, இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்க்குமாரும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் இக்காலத்தில் , நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுதுகளில் பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.