இலங்கையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நிறைவு செய்திருந்த நிலையில் இன்று (மே 08) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி விசாரணையை முடித்த நீதியரசர்கள் அமர்வு அதன் தீர்ப்பை காலவரையின்றி ஒத்திவைக்க தீர்மானித்தது.
இரட்டைக் குடியுரிமை
இந்த நிலையில் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுக்களை முன்வைத்திருந்தார்.
ஹேரத் தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாகக் டயானா கமகே உள்ளிட்ட மற்றும் பலரை குறிப்பிட்டிருந்தார்.
எனவே டயானா கமகே இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பு வழங்குமாறு கோரி மனு தாக்கல் செய்ததாக ஹேரத் தெரிவித்திருந்தார்.