முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இன்று (10) காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற அமர்வு கூடியதன் பின்னர் சபாநாயகர் முன்னிலையில் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.
இதனையடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின் வெற்றிடமான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது
இதேவேளை, வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
அதன்படி, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) பிரிவின் கீழ் செயற்படும் தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் விதிமுறைகளுடன் வாசிக்கப்பட்டு, முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முஜிபுர் ரஹ்மான் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.