பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவத்தில் மினுவாங்கொடை, ஹொரம்பல்ல, வெரகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகாரிகளின் கொடூரமான தாக்குதல்
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்வதற்காக மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திற்குச் சென்றுள்ளார் .
சென்றவர் மறு நாள் காலை வரை வீடு திரும்பவில்லை என்பதால் அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் . முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இளைஞன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர் .
எனினும் பின்னர், இந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பேலியகொட பொலிஸாரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் . குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இளைஞனின் தந்தைக்கு தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டபோது தனது மகன் அலைபேசியில் அழும் சத்தம் கேட்டதாகவும் தந்தை தெரிவித்துள்ளார் .
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி சட்டத்தரணி ஒருவருடன் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஏப்ரல் 25 ஆம் திகதி இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இதேவேளை , சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தந்தை கோரியபோது நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கவுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிகோரும் உறவுகள்
எவ்வாறாயினும், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையிலிருந்ததால் இளைஞனைக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதனைதொடர்ந்து இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்தபோது வைத்தியர்கள் இளைஞனைப் பரிசோதித்த போது இவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .