உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் வைத்து வெளிநாட்டு பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (11) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நடந்தது என்ன? பொலிஸார் விசாரணை
ஹொரணை, மேவனபலான பிரதேசத்தில் உள்ள சிரில்டன் வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அவரது சகோதரியுடன் குறித்த வீட்டில் வசித்த வந்துள்ளார்.
இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் வீட்டில் தங்குவதற்காக சகோதரி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு இரு பெண்களும் உறங்கச் சென்ற நிலையில் அதிகாலை 1.45 மணியளவில் கறுப்பு முகமூடி அணிந்திருந்த இனந்தெரியாத இருவர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இறந்த பெண்ணின் சகோதரியின் கைகளை கட்டி வாயில் துணியை திணித்து அறையில் வைத்துவிட்டு இறந்த பெண் தூங்கும் அறைக்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி, கைகள் கட்டப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை கூறியதை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அதேவேளை உயிரிழந்த பெண்ணின் நகைகள் மற்றும் பணத்தை சந்தேகநபர்கள் எடுத்துச் செல்லவில்லை எனவும், ஆனால் அவரது அறையில் இருந்த அலமாரியை உடைத்து ஆடைகளுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகள் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத நிலையில், கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.