யாழ். தெல்லிப்ப்பளை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு முடியாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 3 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் இயங்கிவந்துள்ளது.
குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில், மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே உறங்கும் நிலையில் காணப்பட்டுள்ளது.
மேலும், மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள், குறித்த வீட்டிலிருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.
இதேவேளை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பெறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலையே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது.
இதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வட மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று, முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல், தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இந்த நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.