யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் இன்று (05) சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலை நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி இருந்தது. இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம்
இதனால் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.
இதனையடுத்து அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டதுடன் முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் பொதுமக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடினார்.
இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.