யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் வன்முறையாளர்களை கண்டுகொள்ளாது பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறீதரனின் இல்லத்தின் முன்பாக வாள்வெட்டு குழு
கொடிகாமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் சிறீதரன் கருத்து தெரிவித்த போது ,யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழல் ஒன்றிற்கு அகப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடிய குழுவினர் தொடர்பாக சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்தல் ஒன்றை வழங்கவுள்ளதாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள, சிறீதரனின் இல்லத்தின் முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத , ஒன்பது பேர் முகத்தையும், மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்து, வாள்களை சுழற்றியவாறு வீதியால் செல்லும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.