ஸ்மார்ட் கல்வி மூலம் உருவாகும் புதிய தலைமுறை ஆக்கப்பூர்வமான புதிய படைப்புகளை நோக்கி நகர்ந்து உலகை வெல்லும் தலைமுறையாக மாறும் என்பதனால், நாம் இந்த பிள்ளைகள் மீது முதலீடு செய்து அவர்களை பலப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 299ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மன்னார் (Mannar) சித்திவிநாயகர் இந்துக் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பி்ட்டுள்ளார்.
கல்வி முறை
ஸ்மார்ட் உலகில் நாம் ஸ்மார்ட் குடிமக்களாக இருக்க வேண்டும். உலகை வெல்ல ஸ்மார்ட் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஸ்மார்ட்டாக மாற்றும் திட்டங்களை வளர்முக நாடுகள் செயல்படுத்தி வருவதால், அதையொத்த திட்டம் எமது நாட்டிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடற்றொழில், விவசாயம், சுற்றுலாத் தொழில் என சகல தொழிற்துறைகளும் ஸ்மார்ட் அமைப்பில் இருக்க வேண்டும்.
ஸ்மார்ட் கட்டமைப்பை நோக்கி மாறுவதன் மூலம் எம்மால் ஓர் நாடாக பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும்.
மேலும். சீர்குலைந்து கிடக்கும் கல்வி முறைக்கு புதிய பக்க பலத்தைக் கொடுத்து, அரச பாடசாலைகள் உயர் மட்டத்திற்கு மேம்படுத்தப்படும்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.