யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவின் கோரிக்கைக்கு அமைய மின்பிறப்பாக்கி இன்றையதினம் (10-07-2024) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், 150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் அதனை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நிரந்தர மின்பிறப்பாக்கியை பெற்று, வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறையை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளுக்கு மின்பிறப்பாக்கி இல்லாத நிலையில் தற்காலிக ஏற்பாடாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் மின்பிறப்பாக்கி ஒன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மேலும் சில வாரங்களில் நிரந்தர மின்பிறப்பாக்கி வரவுள்ள நிலையில் அதுவரையில் மின்தடைப்படும் வேளையில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனுக்கு நன்றி என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.