பதுளை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் லுணுகலை ஹொப்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது மகளுக்கு அதிகமாக கோபம் வருவதாகவும் வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை பிள்ளை கேட்பதில்லை என பல காரணங்களினால் தெய்வ குற்றமாக இருக்கலாம் என எண்ணி பிள்ளைக்கு தாயத்து கட்டுவதற்காக பூசாரி ஒருவரை அணுகியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 3ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த பூசாரி பிள்ளைக்கு தாயத்து கட்ட வேண்டும் என கூறி அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்பின்னர் இந்த பூசாரி தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
பின்னர் சுகயீனமுற்ற சிறுமியை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முற்பட்ட போது சிறுமி கருதரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், இந்த மாதம் 11 ம் திகதி லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய 30 வயதுடைய நமுனுகுலை கனவரல்ல பகுதியை சேர்ந்த பூசாரி லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பூசாரியை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.