கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பேருந்து மோதியதில், அதில் பயணித்த கணவன் மனைவியே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
பெண் பலி
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜாங்கனை யாய 15 இல் வசிக்கும் 34 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நொச்சியாகம நகரை நோக்கி பயணித்த போது இந்த விபத்திற்குள்ளானதாகவும், விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாலும், பேருந்து சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ அறிக்கை
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதி நொச்சியாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.