தலவாக்கலை – அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் மந்தாரம்நுவர – கோனப்பிட்டிய – சீனாக்கொல தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெண் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அவரது சடலம் இன்றைய தினம் (21-08-2024) தோண்டி எடுக்கப்பட்டது.
36 வயதான குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக அவரது கணவரால் 6 மாதங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நுவரெலியா குற்றவியல் விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, குறித்த பெண்ணின் சடலம் கோனப்பிட்டிய – சீனாக்கொல தோட்டத்தில் உள்ள இடமொன்றிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.



















