இந்திய கடற்படையின் INS மும்பை என்ற போர்க்கப்பல் மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று கடற்படை யுத்தக் கப்பல்கள் இன்றையதினம் (25-08-2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 3 நாட்கள் நட்பு ரீதியிலான விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய போர்க்கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டை விட்டுச் செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த விஜயத்தில் இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதே முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 3 கடற்படை யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஹீஃபெய், வூசீசான் மற்றும் கைலியான்சான் ஆகிய மூன்று கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹீஃபெய் 144.5 மீற்றர் நீளமானதாகும் – இதில் 267 பேர் வந்துள்ளனர்.
ஏனைய 2 கப்பல்களும் 210 மீற்றர் நீளமானவை என்பதோடு அவற்றில் 1400க்கும் அதிகமானவர்கள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கப்பல்கள் எதிர்வரும் 29ம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.