சிலர் ஒரு நாளுக்கு இரண்டு முறை குளித்தாலும் கூட உடல் துர்நாற்றம் போகாமல் உடலில் ஒட்டிக் கொண்டே தான் இருக்கும். இவர்களுக்கு மட்டுமின்றி, இவர்களை சுற்றி இருக்கும் நபர்களையும் தர்மசங்கடமாக உணர வைக்கும். இதை சரி செய்ய இவர்கள் கண்ட கண்ட வாசனை திரவங்களை வாங்கி உடல் முழுதும் அப்பிக்கொள்வதும் உண்டு. அப்போதும் கூட, சிலருக்கு சில மணி நேரங்களில் உடல் துர்நாற்றம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
இதை சரி செய்ய எளிமையான சில இயற்கை வழிமுறைகள் இருக்கின்றன. நீங்கள் தினசரி பின்பற்றினாலே போதுமானது, உடல் துர்நாற்றத்தை அடித்து விரட்டிவிடலாம்.
தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்துதல்! தினமும் நன்கு குளிக்க வேண்டும். குளித்த பிறகு உங்கள் உடலை முழுமையாக ஈரம் இல்லாத வண்ணம் துடைக்க வேண்டும். அதே போல, அக்குள் பகுதியில் இருக்கும் முடியை சரியாக நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் ஷூவை காலையில் பயன்படுத்தும் முன்னர், உள்ளே ஈரப்பதம் இல்லாமல், அழுக்கு அல்லது தூசி ஏதும் இல்லாதபடி துடைத்து பயன்படுத்துங்கள். மேலும், உடல் துர்நாற்றம் அதிகமாக இருந்தால் காட்டன் உடைகளை உடுத்த துவங்குங்கள்.
உங்கள் பாதத்தில் அதிகமாக வியர்வை வருகிறது எனில், முற்றிலுமாக மூடியபடி இருக்கும் காலணிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, காற்றோட்டமாக இருக்கும்படியான காலணிகள் பயன்படுத்த துவங்குங்கள்.
புகை, மது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். பிறகு, தினமும் நிறைய தண்ணீர் குடிக்க பழகுங்கள். குறைந்தபட்சம் இரண்டில் இருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருகுங்கள்.
முக்கியமாக நீங்கள் புரோபயாடிக் உணவுகள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். தயிர், மோர் போன்றவை சிறந்த புரோபயாடிக் உணவுகள் ஆகும். எனவே, தினமும் மதிய உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடல் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், துரித உணவுகள், வெங்காயம் அதிகமாக உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.