பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தின் அடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கான வேதனம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன தரப்பினர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஒகஸ்ட் 13 ஆம் திகதி மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதன்படி நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அதனைச் சமர்ப்பிப்பதற்குக் கடந்த 28 ஆம் திகதி மதியம் 12 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து ஏலவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டதுடன் வேதன நிர்ணய சபையில் கடந்த ஒகஸ்ட் 12 ஆம் திகதி எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டது.
நிறுவனங்களின் பிரதிநிதிகள்
எனினும், குறித்த வேதனத்தின் அடிப்படையில் இந்த மாதத்துக்கான வேதனத்தை வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் 350 ரூபாய் என்ற உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் இதுவரை இணக்கம் எட்டப்படவில்லை எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் நாளாந்தம் 1,700 ரூபாய் வேதனத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கி இருப்பதாகவும், வேதன நிர்ணய சபையில் நடந்த அதற்கான வாக்கெடுப்பில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்முறையாக அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கூறி இருந்தனர்.
எனினும் 1, 350 ரூபா என்ற அடிப்படை வேதனத்துக்கு மாத்திரமே தாங்கள் இணங்கி இருப்பதாகவும், மேலதிக கொழுந்துக்கான விலையைத் தவிர வேறெந்த கொடுப்பனவுகளுக்கும் தாங்கள் இணங்கவில்லை எனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த மாதத்துக்கான வேதனம் நாளாந்தம் 1,000 ரூபாய் என்ற பழைய தொகையின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
இந்தநிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை மறுதினம் வேதன நிர்ணய சபை மீண்டும் கூடவுள்ளதாக பெருந்தோட்ட நிறுவன சம்மேளன தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.