முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளையே ஆண்டுதோறும் நாம் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடி வருகிறோம். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலேயே விநாயகப் பெருமான் அவதாரம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன.
இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் என்றாலே அது விநாயகர் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீடுகளிலும், பொது இடத்திலும் வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அப்பம், அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவது உண்டு.
பிறகு 3வது அல்லது 5வது நாளில் வீடுகளிலும், பொது இடத்திலும் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கும் வைபவம் நடைபெறும். இப்படி கரைப்பதால் அந்த சிலையை போலவே நம்முடைய வினைகளும் கரைந்து விடும் என்பது நம்பிக்கை. வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி திகதி மற்றும் நேரம்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 07ம் திகதி, ஆவணி 22ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. செப்டம்பர் 06ம் திகதி பகல் 01.48 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 07ம் திகதி பகல் 03.38 வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. செப்டம்பர் 06ம் திகதியே சதுர்த்தி திதி துவங்கினாலும், செப்டம்பர் 07ம் திகதி தான் சூரிய உதய காலத்தின் போது சதுர்த்தி திதி உள்ளது.
அதனால் அந்த நாளையே விநாயகர் சதுர்த்தி நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்று சனிக்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமும், பகல் 01.30 முதல் 3 மணி வரை எமகண்ட நேரமும் உள்ளது. இதனால் இந்த நேரங்களை தவிர்த்து பகல் 1 மணிக்கு முன்பாக விநாயகர் வழிபாட்டினை செய்வது சிறப்பானதாகும்.
விநாயகர் சதுர்த்தி விரத முறை
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் விநாயகருக்கு விருப்பமான விநாயகர் அகவல் படித்து, அவரது வரலாற்று கதைகளை படிப்பது விநாயகரின் அருளை பெற்றுத் தரும்.
அதோடு விநாயகரின் 108 போற்றி மந்திரங்களை சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடலாம். விநாயகர் சிலை வாங்குவதற்கு கூட வசதி இல்லாதவர்கள் மஞ்சள், சந்தனம், பசுஞ்சாணம், மண் என பொருளில் விநாயகரை பிடித்து வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, இரண்டு அருகம்புல் படைத்து வழிபட்டாலும் அதில் எழுந்தருளி விநாயகர் நமக்கு அருள் செய்வார்.