பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் முகமாக 06.09.2024 ராகலை நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மக்கள் தற்பொழுது ஒரு சுகமான நிலையில் உள்ளனர் இதே நிலை நீடிக்க வேண்டுமாயின் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து வாக்களியுங்கள்.
அத்தோடு வருகிற 10-ஆம் திகதி நான் கூறியபடி மக்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் கிடைக்கும். நேருக்கு நேராக விவாதிக்க முடிந்தால் வந்து என்னோடு மோதி பார்க்க சொல்லுங்கள் வெறுமனே சென்று தொலைக்காட்சிகளில் கட்டிப்பிடித்துக் கொண்டு போவதற்கு மாத்திரம் அவர்களால் செல்ல முடியும்.
நீங்கள் எல்லோரும் மொத்தமாக வாருங்கள் விவாதிக்க நான் ஒத்தைக்கு ஒத்தையாக வருகிறேன்.
அதேபோல் மக்களுக்கு காணி உரிமை நிச்சயமாக நான் பெற்றுக் கொடுப்பேன் தனி ஒரு நபராக அரசில் இருந்து கொண்டு பல்வேறு வேலை திட்டங்களை நான் செய்து வருகிறேன்.
இருப்பினும் எங்களை விமர்சித்து கொண்டு வருவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அத்தோடு வீடமைப்பு திட்டத்திலும் நாங்கள் தோட்டத் தொழிலாளிக்கு மாத்திரம் அல்லாது தோட்டத்தில் பிறந்த அனைவருக்கும் வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
முன்னாள் அரசு இந்த வீட்டு திட்டத்தை எம்மிடம் கொடுக்கும் போது அப்படியான ஒரு சூழ்நிலை கிடையாது. அத்துடன் ஒன்பது லட்சம் பெருமதியோடு வீட்டு திட்டத்தை நாங்கள் 35 லட்சம் பெறுமதிக்கு மாற்றி உள்ளோம். அதை மாற்றுவதற்கு 2 1/2 வருடங்களுக்கு மேலானது” என்றார்.