உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி குறித்த தொகையை செலுத்தி முடித்துள்ளார்.
முழுத் தொகையையும் அவர் 8 தவணை முறைகளில் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி அவர் இந்தத் தொகையை செலுத்தி நிறைவு செய்துள்ளார்.
ஜனவரி 12, 2023 அன்று, முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஐஜிபி பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
புலனாய்வுத் தகவல்
போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும் தாக்குதல்களைத் தடுக்க இவர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதனையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு100 மில்லியன் ரூபாவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் சிஜடி பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு50 மில்லியன் ரூபாவும் மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சிசிர மெண்டிஸுக்கு அவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.