2025ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இரண்டு தடவைகள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
2025ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஆவணம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நிறைவேறியவுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அரச ஊழியர் சம்பளம் நிச்சயம் உயரும் என்றும் கூறுகின்றனர்.
2024 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, பல வருடங்களாக நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,இதன்படி 25,000 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவு மற்றும் 24 சதவீத அடிப்படை சம்பள அதிகரிப்பு என்பனவற்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை மீண்டும் 2024 ஆகஸ்ட் 12 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், செப்டம்பர் 4ஆம் திகதி மேற்படி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும், அதற்கமைவாக 8 விடயங்கள் தொடர்பான கொள்கை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வருடத்திற்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் அங்கீகாரத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குழு சமர்பித்த பரிந்துரைகள் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்